மழை, மழை, மழை,

     மழை எங்களுக்கு வேண்டும்.        

மழை, மழை, மழை,

மழை வேண்டுமென்று நாங்கள் வேண்டுகிறோம். 

 

மழை, மழை, மழை,

       மழை எங்களுக்கு தேவை          

மழை, மழை, மழை,

                       மழைக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.                ஸ்ரீஅன்னை.

 

பிரார்த்தனை

 

யோகத்தின் இலக்கு வாழ்வை மறுப்பது அல்ல, அதை முழுமைப்படுத்துவதே ஆகும்.

 

ஒரு சாதகர் மோதிக்பாபுவிடம் ஸ்ரீ அரவிந்தர் சங்கராச்சாரியாருக்கு மிக நெருக்கமாக வருவது போலத் தோன்றுகிறது என்று கூறினார். 1923ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் அச்சாதகர் ஸ்ரீ அரவிந்தரை சந்தித்தார்.

"நாம் அறியாமையை ஏற்கக் கூடாது, சாதாரண வாழ்க்கை அறியாமை நிரம்பியது, எனவே அவ்வாழ்க்கையை நிராகரிப்பதுதான் ஒரே தீர்வு" என்பதுதான் சங்கரரின் போதனை ஆகும்.

ஸ்ரீஅரவிந்தரும் ஏறக்குறைய இதையே கூறியதால், 'ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து நாம் பெறக் கூடியது மிகவும் சொற்பமே' என்பது அச்சாதகரின் கருத்து. இதற்கு ஸ்ரீஅரவிந்தர் பின்வருமாறு பதில் அளித்தார்.

 

இது எனது யோகத்தைப் பற்றிய தவறான புரிதல் ஆகும். எனது யோகத்தின் இலக்கு வாழ்க்கையை வெறுத்து ஒதுக்குவது அல்ல. மாறாக அதனை முழுமைப்படுத்துவது ஆகும். ஆம், சாதாரண வாழ்க்கை அறியாமை நிரம்பியது. ஆனால், அறியாமையை விலக்கி வாழ்வது என்பது முடியாத ஒன்றல்ல. உண்மையில் முழு உணர்வு பெற்ற வாழ்வு என்பதே பரிணாமத்தின் பொருள் ஆகும். பொருண்மையில் அறியாமை படிந்துள்ளது. வாழ்க்கையிலும் அறியாமை உள்ளது.

 

நாம் உணர்வு நிலையில் முன்னேறிய வாழ்க்கை ஒன்றை நோக்கி நகர எண்ணுகையில் இது தடை செய்கிறது. இத்தடைகள் அதிமனம் மூலமாக வெற்றி கொள்ளப்பட வேண்டும். மேலும், கீழுமான பல்வேறு நெழிவு சுழிவுகள் எதிர்ப்படுகின்றன. இவை விளங்கிக் கொள்ளப்பட்டு அன்றாட வாழ்க்கையை மாறுதலுக்கு உள்ளாக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விஞ்ஞானம் என்பது மேலான ஒரு மனோநிலை என்று சங்கரர் கருதினார். ஆனாலும் அது மனம் சார்ந்ததுதான் என்பதால் அவ்விஞ்ஞானத்தை அவர் நிராகரித்து விடுகிறார்.

 

சங்கராச்சாரியார் இறை வெளிப்பாடு என்பதை ஏற்பவர் அல்ல, அது மாயை என்றார். வெளிப்பாடு என்பது தெய்வீக மெய்மை, ஆற்றல் ஆகும். அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இந்த ஆற்றலானது நம்மில் செயல்படுகிறது. அந்த ஆற்றலுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வது சாத்தியமானது தான். அந்த ஆற்றல் மூலம் இந்தப் பூமியில் இறை வெளிப்பாட்டை ஏற்படுத்துவதில் நாம் பங்கு பெற இயலும். சில சமயங்களில் நானும் விஞ்ஞானம் என்பது என்ன? என்பதைப் புரிந்து கொள்ளாமல் உயர் உணர்வு நிலையை விஞ்ஞானம் என்றே கருதினேன்.

 

தியானத்தில் உயர் உணர்வு நிலை பெறுவது போதுமானது அல்ல. சாதாரணமான வாழ்வின் மிகச் சாதாரணமான செயல்களைச் செய்யும் போது கூட அதன் செயல்படும் இருப்பு உணரப்பட வேண்டும். அதிமனம் என்பது இறைத் தன்மை உடையது. அது பிரபஞ்சம் அனைத்தின் செயல்பாடுகளுக்கும் வழிகாட்டுவது, அவற்றை ஒழுங்குபடுத்துவது ஆகும். இந்த உணர்வு நிலை நமது பொது இயல்பாக மாறிவிட வேண்டும். அதிமனம் கீழிறங்கி வந்து நம் மனதை, உடலை, வாழ்வனைத்தையும் முழு மாறுதல் அடைய அனுமதிக்க வேண்டும்.

 

மனித யத்தனத்தால் எந்தப் பயனும் இல்லை. முழுமையான சரணாகதி மூலம் மேலே இயங்கும் ஆற்றல் இறங்கி வந்து செயல்பட முயற்சி செய்யப்பட வேண்டும். அதிமன உணர்வை உணர்ந்தறிவது கடினமானது அல்ல. அதைத் தீவிரமாகச் செயல்படச் செய்வதுதான் கடினமானது. எனவே பல்வேறு புனித ஆத்மாக்களும் இந்த உண்மையை உணர்ந்து அறிந்தும் மனதின் மூலமாகவே செயல்பட்டார்கள். அதிமனதையும் மனதின் பகுதி என குறுக்கி விட்டார்கள். எனவே அதிமன உணர்வு நிலை தன் முழுமையில் செயல்படுவதை அவர்களால் அனுபவித்து உணர முடிய வில்லை. இத்தகைய புதிய செயல்பாட்டை இதுவரை யாரும் முயற்சிக்கவும் இல்லை.                                                                         

ஆகஸ்ட் 15, தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டிய ஒரு நாள்.

 

இந்நாளை நாம்தான் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கான நாளாக மாற்ற முடியும். நாம்தான் இப்பணியை வளர்ச்சி பெறச் செய்ய முடியும்.

இந்த நாளுக்கு முன்பாகவே நாம் நம்மை முற்றிலுமாக அர்ப்பணித்து விடவேண்டும். உள்முகமாகத் திரும்பி கடந்த காலத்தைப் பரிசீலித்து நாம் எத்தனை தூரம் முன்னேறி இருக்கிறோம் நம்முள் எது தயாராக இருக்கிறது, எது தடை செய்கிறது, எவை எல்லாம் இன்னும் மாறுதலடைய வேண்டும், பரிபூரண மாறுதலுக்கு எவையெல்லாம் தயாராக இருக்கின்றன, எது இன்னுமும் இருண்மை யிலேயே கிடக்கிறது என்பதை எல்லாம் பரிசீலிக்க வேண்டும்.

நாம் தேவையென உணரும் மாறுதலுக்கென ஆர்வமுற வேண்டும். அம்மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கீழே அழைக்க வேண்டும்.

புற உலகில் நம்மை வீசி எறிந்து விட்டோமானால் இவற்றை எல்லாம் நிறைவேற்றுவது சாத்தியம் ஆகாது. மாறாக, தீவிரமாக ஒருமுனைப்பட்டால் மாத்திரமே உள்ளியல்பு மேல் எழுந்து ஒளியைப் பெற்றுக் கொள்ளத் தயாராகும். புற இயக்கங்கள் நம்மைப் பாதிப்பதை எவ்வளவு அனுமதிக்கிறோ மோ அதற்கான விகிதத்தில் உள்முக மாறுதலுக்குப் பாடுபடத் தேவையான ஆற்றலை நாம் இழந்து விடுவோம்.

சாதாரண தினங்களில் செய்யப்படும் செயல்கள் விசேஷமான தினங்களின் இருப்பில் அவை உள் இருப்பின் செயல்பாட்டினை பாதிக்காததாக இருக்க வேண்டும். வழக்கமான சூழ்நிலைகள் அனைத்தும் இத்தினத்தன்று முன்னேற்றத்திற்குப் பயன்படத்தக்கதாக அமைய வேண்டும்.

தரிசன தினத்தன்று காலையில் என்னைப் பபார்க்க வரும் போது அது ஒரு அன்றாடச் சடங்காக கருதப்படக் கூடாது. உங்களது மனமும், ஆன்மாவும் பெற்றுக் கொள்ளத் தயாரானதாக இருக்க வேண்டும். இப்பொழுது நான் கூறுவதைக் கேட்பது உங்களது மனதின் ஆர்வத்திற்கானதாகவோ, அதனைத் திருப்திபடுத்துவதாகவோ இருக்குமானால் நான் பேசாமல் இருப்பதே சிறந்தது.

அது உங்கள் உள் இருப்பை, ஆன்மாவை ஏதாவது ஒரு இடத்தில் தொட்டால் மாத்திரமே இந்த நாள் பயனுள்ளதாக ஆக முடியும். இன்றைய தியானமும் இதே போன்ற சூழ்நிலைகள் உள்ளதாக இருத்தல் வேண்டும். தீர்க்கமாக எதுவும் கீழே இறங்கவில்லை என்றாலும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பலனளிக்கத்தக்கதான ஊடுருவல்கள் நிகழக் கூடும். யோகத்தின் பார்வையில் இதுவே ஆகஸ்ட் 15ம் நாளுக்கு அளிக்கப்படக் கூடிய விளக்கம் ஆகும்.                 பகவான் ஸ்ரீஅரவிந்தர்.